இரங்கூன் சிறையைக் கேட்டுப் பார்!
சுதந்திரம் சும்மா கிடைத்ததா என்று?
கடைசி இந்திய முகலாயப் பேரரசன் பகதூர்ஷாவை
நாடுகடத்தி இரங்கூன் சிறையில் அடைத்து உயிர்ப் பறித்த கதை சொல்லும்!
மங்கள்பாண்டேயைக்
கேட்டுப்பார்!
சிப்பாய்களின் கலகத்தை அவன் கதைகதையாய்ப் பகர்வான்!
ஜான்சிராணி இலட்சுமிபாயைக் கேட்டுப்பார்!
அவளது வீரவாளின் பவித்திரம் கண்டு நடுங்கிய வெள்ளைப்படையின்
நிலைதெரியும்!
முதல் இந்தியவிடுதலைப் போரில் கொல்லப் பட்ட கொடூரம் புரியும்!
கயத்தாற்றின் புளியமரத்தைக் கேட்டுப் பார்!
வீரபாண்டியன் கட்டபொம்மனைப் பலிகொடுத்துதான் சுதந்திரம் பெற்றகதை சொல்லும்!
வெள்ளைக்காவல்காரனின் தடியைக் கேட்டுப்பார்!
அது எத்தனைபேரின் மண்டையை உடைத்து இரத்தம் சிந்த சுதந்திரம் வந்ததெனச் சொல்லும்!
பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதி ராயும்
கொடிகாத்த திருப்பூர்க் குமரனும்
கண்முன்னே வந்துபோவார்கள்!
உருதுமொழியைக் கேட்டுப்பார்!
அம்மொழித்திறனால்
ஹைதர்அலியின் மதிப்பைப் பெற்ற வீரவேலுநாச்சியாரின்
வீரவாளின் வெற்றிக்கதை சொல்லும்!
அவள் வாள்சுழற்றும் ஓசைக்கே பயந்தோடிய வெள்ளைப்படைகளின்
கதை தெரியும்!
செக்குகளைக் கேட்டுப் பார்!
விடுதலைக்காய் மாடாகச் செக்கிழுத்த கப்பலோட்டிய சிதம்பரத்தின் தியாகத்தைச் சொல்லும்!
ஜாலியன்வாலாபாக்கைக்
கேட்டுப்பார்!
ஈவிரக்கமில்லாத ஜெனரல் டையரின் குண்டுமழைகளால்
உயிரிழந்த நூற்றுக்கணக்கான அப்பாவி இந்தியர்களின் படுகொலை வரலாற்றினைக் கண்ணீர்விட்டுச் சொல்லும்!
அந்தமானின் சிறைக்கூடங்களைக்
கேட்டுப் பார்!
குடும்பத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு
தனிமைப்படுத்தப்பட்டு
வந்தேமாதரம் எனமுழக்கமிட்டதற்காக
சிறையிலே அடைக்கப்பட்டு
கொடுஞ்சாவுக்கு ஆளான வீரர்களின் கதையை ஆயிரக்கணக்கில் சொல்லும்!
பனிப்பாளங்களைக் கேட்டுப் பார்!
வெற்றுடம்பாய் அதன்மீது படுக்கவைத்து எழுந்தால் தடியால் ஓங்கிஅடித்தே கொலைசெய்த
வீரர்களின் கதை சொல்லும்!
குண்டூசிகளைக் கேட்டுப் பார்!
விடுதலைவேண்டிப் போராடியவர்களைப்
பிடித்து சிறையில் அடைத்து நகக்கண்ணில் குண்டூசியைச் செருகி வதைத்த கதைதனைச் சொல்லும்!
போர்பந்தரைக்கேட்டுப் பார்!
அரையாடையும் அதுவும்
கதராடையாம்
கையிலே ஓரு கைத்தடியாம் கொண்டு அறப்போராட்டத்தைக்
கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம்பல செய்து
தேசத்தந்தையான காந்தியின் விடுதலைப்போராட்டத்தைச்
சொல்லும்!
முண்டாசைக் கேட்டுப்பார்!
அது மகாகவிசுப்ரமணிய பாரதியாரின் வீரத்தை விடுதலை வேட்கையை பயமற்ற தன்மையை யாவருக்கும் பறைசாற்றும்!,
இப்போது சொல்லுங்கள் சும்மாவா கிடைத்திருக்கும் நம் சுதந்திம்?
த.ஹேமாவதி
கோளூர்
No comments:
Post a Comment