Saturday, May 30, 2020

பிரபுவின் சிறுகதை - 1.

அதிகாலை மணி இரண்டு. தூக்கம் வராமல், புரண்டு புரண்டு படுத்தவாறு இருந்தான், சொக்கலிங்கம். 

முதல் நாள் மாலையில், தன் தம்பி ராமலிங்கத்துடன் தொலைபேசியில் பேசியதிலிருந்து தவிப்பாகவே இருந்தது அவனுக்கு. 

வீட்டு கட்ட உதவும் சாமான்கள் மற்றும் வண்ணங்கள் விற்கும் கடை நடத்துபவன் சொக்கலிங்கம். 'தொழில் பழகுகிறேன்'- என்று சென்னைக்குச் சென்ற தம்பி ராமலிங்கம் ஓரளவு அனுபவம் வந்தவுடன், ஒரு ஜவுளிக் கடை தொடங்கி வெற்றியாக நடத்தி அந்த நகரத்திலேயே தங்கி விட்டவன். சுமார் இரண்டு வருடங்கள் முன்பு, தான் வீடு கட்டப் போவதாகவும், பண உதவி தேவைப்படுவதாகவும்  கேட்க, சொக்கலிங்கமும் தர ஒத்துக் கொண்டான். 

அவன் மனைவி கற்பகம், “ஏங்க, நாம கூட வீடு கட்டணும்னு ப்ளான் பண்ணியிருக்கோம்ல. இப்போ உங்க தம்பிக்கு எப்படிக் குடுக்கிறதாம்..?”

“நீயே யோசிச்சுப் பார், நாம பணம் ஓரளவு ரெடி பண்ணி, கூடக் கொஞ்சம் லோன் வாங்கிக் கட்டணும்னா கூட இன்னும் ரெண்டு வருஷம் ஆகும். அதுவரைக்கும் சேமிக்கிற பணத்த அவனுக்குக் கொடுப்போம், அவனாவது வீடு கட்டட்டும். பின்னாடி நமக்கு வேண்டிய போது, திருப்பித் தரப் போறான்.”

“பாங்க்ல போட்டா கொஞ்சம் வட்டியாவது வரும்ல...”

“பரவாயில்ல.., அவனுக்கு நான் உதவலைன்னா... வேற யாரு செய்யப் போறா...?”

சொக்கலிங்கத்திற்கும், ராமலிங்கத்திற்கும் ஒன்றரை வருடங்கள் தான் வித்தியாசம். 

முதலிலிருந்தே தன் தேவைகளைக் குறைத்து, தம்பிக்காக விட்டுக் கொடுத்து வேண்டிய உதவிகளைச் செய்வதில் முனைப்பாக இருந்தவன் சொக்கலிங்கம். தந்தை இல்லாததால், அது தன்னுடைய கடமை என்றிருந்தான். ஆகையால், இப்பொழுது இந்த மாதிரி ஒரு வேண்டுகோள் வரவும் நிராகரிக்க மனம் வரவில்லை.

அதுவரை சேர்த்து வைத்திருந்த பத்து லட்சத்தை அன்றே கொடுத்து விட்டான். பின்னர், தனக்கு வரும் லாபத்தை எல்லாம் அவ்வப்பொழுது அனுப்ப ஆரம்பித்தான். தம்பியின் வீடும் வளர்ந்து கொண்டிருந்தது. சென்ற வாரம் தன்னுடைய வரவு செலவுகளை எழுதி வைக்கும் புத்தகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, கடைசியாக ஆறு மாதங்கள் முன்பு எட்டு லட்சம் தம்பிக்குக் கொடுக்கப்பட்டதாக எழுதியிருந்தான். மொத்தம் இருபத்தியெட்டு லட்சம் ஆகியிருந்தது.

'தம்பி தானாகத் திருப்பித் தரும்வரை, தாம் பொறுமையாக இருக்க வேண்டும்'- என்று சொல்லிக் கொண்டான்.  

இன்று மாலை தம்பியிடமிருந்து அலைபேசி அழைப்பு வந்தது.

“அண்ணே, சௌக்கியம்தானே..?” 

"ராமா.., வீட்டு வேலைல்லாம் எப்படி போயிட்டு இருக்கு...?” 

"இப்போ கொஞ்சம் இன்டீரியர் ஒர்க் நடந்துக்கிட்டு இருக்கு. 'இன்னும் எப்படியும், நாலு மாசத்துல, குடி போயிறலாம்'-ன்னு இன்ஜினியர் சொல்லியிருக்காருண்ணே..”

“ரொம்ப சந்தோசம். ஒரு வீடுதான் கட்டி வாழப் போறோம், நல்லா செஞ்சுக்கோ. எதிலும் குறை வைக்காதே, பின்னாடி, இப்படி பண்ணி இருக்கலாம். அப்படி பண்ணி இருக்கலாம்'- ன்னு தோணக் கூடாது, சரியா...?” 

"அண்ணே... உங்க மேற்பார்வையில வளர்ந்தவன், நான். 'விரலுக்கேத்த வீக்கம் வேணும்' - ன்னு நீங்க அடிக்கடி சொல்வீங்க. என் விரல் எனக்குத் தெரியும். சரிண்ணே, நீங்க எப்போ தொடங்கப் போறீங்க...?”

"நீ முதல்ல முடி. அப்புறம் பார்த்துக்கலாம்” 

“இப்பவே, ப்ளான் பண்ண ஆரம்பிச்சிருங்கண்ணே... நான் எப்படியும் அடுத்த ஒரு வருஷத்துல, கொஞ்சம் கொஞ்சமா உங்ககிட்ட வாங்கின இருபத்திமூணு லட்சத்தை கொடுத்துடறேன்.”

இப்படித் தம்பி சொல்லவும், சில வினாடிகள் மௌனமாக இருந்தான், சொக்கலிங்கம். ‘என்னடா இது, இருபத்தியெட்டு லட்சம் ஆயிற்றே, இவன், இருபத்திமூன்று என்கிறானே...’ 

தொலைபேசியில்..., “தம்பி, அது இருபத்தி மூணா..? இருபத்தியெட்டுன்னு..., நான் நினைக்கிறேன்.” 

"அப்படியா, நான் செக் பண்ணிட்டு ஒரு அஞ்சு நிமிஷம் கழிச்சுக் கூப்பிடுறேன்.”

இதுவரை நடந்த உரையாடல் ஒன்றும் பெரிதாகப்படவில்லை, சொக்கலிங்கத்திற்கு. இரண்டு நிமிடங்கள் கழித்து,  மறுபடியும் அழைப்பு வந்தது.

“அண்ணே, ஃபுல்லா செக் பண்ணிட்டேன், இருபத்திமூணு லட்சம்தான் வாங்கி இருக்கிறேன்.”

'இதற்கு, எப்படி பதில் அளிப்பது..?'- என்று சற்று யோசித்தான் சொக்கலிங்கம். 

ஹவுஸ் ஸஜ்ஜஜ்"ஒரு வாரம் முன்னாடிதான், இந்த வீடு கட்டின வரவு செலவுகளெல்லாம் எங்க ஆடிட்டர் கிட்ட கொடுத்தேன். அப்போ உங்க சைடுல இருந்து இருபத்திமூணு லட்சம் வந்திருக்குன்னு அவரும் சொன்னது ஞாபகம் இருக்கு.”

"அப்படியா, நானும் ஒண்ணுக்கு ரெண்டு தடவ செக் பண்றேன். நீயும், ஒரு தடவை மறுபடியும் பாரேன்..”

"சரி, பாக்குறேன்..”. அலைபேசி துண்டிக்கப்பட்டது 

அப்பொழுது ஆரம்பித்தத் தவிப்பு இப்பொழுதும் தொடர்ந்து கொண்டிருந்தது. 

'இதைத் தம்பி வேண்டுமென்றே செய்திருக்க வாய்ப்பு இல்லை. எங்கேயோ... தவறு நடந்திருக்கிறது. இப்பொழுது இதை மேற்கொண்டு எப்படி எடுத்துச் செல்வது..?'- மனைவியிடம், 'இந்த உரையாடலைச் சொல்லி, கலந்தாலோசிக்கலாமா...?' 

'வேண்டாம்,.. வேண்டாம்..., யாருக்கும், எந்த ஒரு மனக்கசப்பும் ஏற்பட்டுவிடக்கூடாது. ஐந்து லட்சம் என்பது, ஒரு சிறிய தொகை அல்ல. நாளை அழைக்கிறேன்'- என்று கூறியிருக்கிறான். ஒருவேளை இருபத்திமூன்று தான்'- என்று சொல்லிவிட்டால்...?’ 

யோசிக்க... யோசிக்க..., இந்த விவகாரத்தால், இத்தனை வருட உறவு முறிய வாய்ப்பு உள்ளதை உணர்ந்தான். மனது கனக்க ஆரம்பித்தது. 

'இல்லை... இல்லை... அப்படி ஒன்றும் நடக்காது...’

'ஒருவேளை தம்பி, தன்னை ஏமாற்ற நினைக்கிறானோ...'- என்று ஒரு கணம் சிந்தித்தான்.  

பின்னர், உடனே தன்னைத்தானே கடிந்து கொண்டான், அவ்வாறு நினைத்ததற்காக வருத்தப்பட்டான். மீண்டும் அந்தக் கணக்குப் புத்தகத்தை புரட்டிப் பார்த்தான். 

‘அவனுக்கு தரவில்லையென்றால்.., வேறு எதற்கு செலவு செய்தேனோ... அதை எழுதியிருப்பேன், அப்படி ஒன்றும் இல்லையே...’

இதோ படுக்கைக்கு வந்து நான்கு மணி நேரங்கள் ஆகிவிட்டன, தூக்கம் வரவில்லை. எப்படி வரும்...? 

'நாற்பது வருட பந்தம், இந்தப் பணம் என்னும் பேயால், அழிந்து விடுமோ...? என்ன செய்யலாம்…!!! என்ன செய்யலாம்..?’ 

திடீரென்று, ஒரு ஞானோதயம் உதித்தது. 

'நான், இனி அவனிடம் இதைப்பற்றி கேட்கப்போவதில்லை. ஐந்து லட்சம் தானே, அடுத்த ஆறு மாதங்களில், நான் அதை மீட்டெடுக்க முடியும். ஒரு சில மாதங்கள் என் தொழிலில் நஷ்டம் இருந்ததாக எண்ணிக் கொள்கிறேன், அவ்வளவுதானே. நல்ல வேளை, வேறு யாருக்கும் இந்த விஷயம் தெரியாது. இதை இப்படியே விட்டு விடுவோம். இதன் மூலம் குடும்பத்தில் எந்தக் குழப்பமும் இல்லாமல், எந்த விரிசலும் ஏற்படாமல் இப்பொழுது உள்ளபடியே தொடரட்டும். ஐந்து லட்சம் பெரிதா..?, தம்பி பெரிதா...?  போகட்டும் அந்தப் பணப்பேய்….”  

இந்த எண்ணம் தோன்றியவுடன், அவன் மனம் மிகவும் அமைதி அடைந்தது. அடுத்த பதினைந்து நிமிடங்களில் உறங்கிப் போனான். 

அடுத்த நாள் காலை, வெளியே சற்று உலாத்திவிட்டுத் திரும்பியபோது, அவர் மனைவி,

"என்னங்க நேத்து சரியா தூக்கம் இல்ல போல...? என்ன விஷயம்?” 

“அதெல்லாம் ஒண்ணும் இல்ல” 

"இப்போகூட காலையில இருந்து என்கிட்ட ரெண்டு வார்த்தை கூட பேசல..”

அதைக் காதில் வாங்காதது போல், அன்றைய தினசரியைப் படிக்க ஆரம்பித்தான் சொக்கலிங்கம்.

“அபிராமி, ஃபோன் பண்ணினா”

சட்டென்று நிமிர்ந்தான். 

அபிராமி ராமலிங்கத்தின் மனைவி. ‘தான் மறைக்க நினைத்தது, வெளிப்பட்டு விட்டதோ...?’

"என்னவாம்?”

“இந்த லீவுல, கொழந்தைங்கள இங்க கொண்டு வந்துவிடப் போறாளாம். பெரீம்மா வீட்டுக்குப் போணும்ன்னு சொல்றாங்களாம். நம்ம சித்திரைத் திருவிழா வருதில்ல... போன வருஷம் மிஸ் பண்ணிட்டாங்களாம், இந்த வருஷம் கண்டிப்பா பாக்கணுமாம். நம்ம பையனுக்கும் அவங்ககூட நல்லா பொழுது போகும்.”

"அவ்வளவு தானே...”

“என்ன கொஞ்சம் கூட சுவாரசியம் இல்லாமக் கேக்குறீங்க..?”

"வரட்டும்மா, நல்லா வரட்டும்..”

“ஒண்ணு கவனிச்சீங்களா...? பெரீம்மா வீடுன்னு சொன்னாங்களாம், பெரீப்பா வீடுன்னு சொல்லல…” - என்று சொல்லிச் சிரித்தாள் கற்பகம்.

அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தான், சொக்கலிங்கம்.

"அப்புறம் இன்னொண்ணும் சொன்னா...”

“………………”

"நாம பணம் கொடுத்ததாலதான், இவ்வளவு சீக்கிரம் வீடு கட்ட முடிஞ்சதாம். ஒரு தாங்க்ஸ் சொல்லச் சொன்னா...”

இதுவரை இறுக்கமாக இருந்த சொக்கலிங்கத்தின் முகம் மலர்ந்தது. 'தான் எடுத்த முடிவு எவ்வளவு சரியானது'- என்று தன் மேல் ஒரு சிறிய கர்வம் கூட எட்டிப் பார்த்தது, அவனுக்கு. 

அன்றும், அடுத்த இரண்டு நாட்களும், தம்பியிடமிருந்து அழைப்பு வரவில்லை. 

மூன்று நாட்கள் கழித்து, காலையில் அலைபேசி சிணுங்கியது, ராமலிங்கம் என்று பெயரையும் காண்பித்தது. சொக்கலிங்கத்தின் மனம் படபடக்க ஆரம்பித்தது. தான் எடுத்த முடிவைக் காக்க உதவுமாறு ஒருகணம் ஆண்டவனை வேண்டிவிட்டு கைபேசியை எடுத்தான்.

“ஹலோ, சொல்லு ராமா...”

“அண்ணே... மன்னிக்கணும். ஆடிட்டர், இப்போ தான் கூப்பிட்டார். நீங்க சொன்னது தான் சரி, இருபத்தி எட்டு லட்சம் வாங்கியிருக்கேன் உங்ககிட்ட இருந்து”

சொக்கலிங்கத்திற்கு சட்டென்று பேச்சு வரவில்லை. இவ்வாறு நடக்க வாய்ப்பு இருக்கிறது என்று யூகித்து இருந்தாலும்,  'நடக்காமல் போய்விட்டால், என்ன ஆகும்.?'- என்ற கவலை மேலோங்கி இருந்ததால், தம்பி இவ்வாறு கூறியவுடன் அமைதியாகிவிட்டான். 

“சரிடா, பரவாயில்ல...”

"ஒண்ணும் நினைச்சுக்காதீங்கண்ணே, சரியா...?” 

“உன்னப் பத்தி எனக்குத் தெரியாதா..? இதை இப்படியே விட்டுற்றா”

இப்பொழுது மனம் குதூகலம் ஆகி விட்டது. ஐந்து லட்சம் தவறாமல் இருந்ததற்காக அல்ல, உறவைத் தவற விடாமல் இருந்ததற்காக... சட்டென்று எழுந்து சட்டையை மாற்றிக் கொண்டு புறப்பட்டான்.

"எங்கே கிளம்பிட்டீங்க...?” 

"கோவிலுக்கு...”

"என்ன இப்போ திடீர்னு..?” 

"ராமன் கால்ல போய் கொஞ்சம் விழுந்துட்டு வர்றேன்..”
 
 "---------------"

ஐந்து மாதங்கள் கழித்து, எல்லோரும் கிரகப்பிரவேசத்திற்கு சென்னை சென்று வந்தார்கள். வீடு கட்டிய அனுபவத்தை நன்கு விவரித்தான், தம்பி. 

சொக்கலிங்கம், மதுரையில் தான் வாங்கியிருந்த இடத்தைச் சொன்னவுடன், அதற்கேற்றவாறு எப்படி வீட்டைத் திட்டமிட வேண்டும் என்பதையும் விவாதித்தார்கள். 

பின்னர் வீடு கட்ட ஆரம்பித்து, ஒரு ஆண்டு ஓடிவிட்டது. சொன்னபடி, இருபத்தியெட்டு  லட்சத்தையும், இந்த ஒன்றரை ஆண்டுகளில் திருப்பித் தந்துவிட்டான் தம்பி. 

அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை. கடை இல்லாததால், வெளியே சென்றுவிட்டு சொக்கலிங்கம் திரும்பி வந்தபோது, வீட்டில் கற்பகம் யாருடனேயோ பேசிக்கொண்டிருந்தாள். 

“வாங்க, உங்களுக்காகத் தான், இவர் வெயிட் பண்ணிட்டு இருக்காரு.” 

சற்றுப் பொறுத்துதான் ஞாபகம் வந்தது. “ஓ, உன் தூரத்துச் சொந்தம் இல்ல...?  திருச்சியில இருக்கிறதாச் சொல்லுவியே..?"  

“ஆமாங்க,  பேரு ஸ்ரீதர். ”

ஸ்ரீதர் பேச ஆரம்பித்தான். “உங்களாலதான், நான் இன்னிக்கு ஒரு மனுசனா தலை நிமிர்ந்து நிக்கிறேன், மாமா.. ” 

"என்ன சொல்ல வர்ற, புரியலையே..”

"ரெண்டு வருஷம் கழிச்சு, இப்படி லேட்டா வந்ததுக்கு என்ன மன்னிக்கணும்.”

ஒன்றும் புரியாமல் தன் மனைவியை நோக்கினான் சொக்கலிங்கம்.

ஸ்ரீதர் தொடர்ந்தான். 

“நான் ஒரு பிசினஸ் ஆரம்பிச்சு, ஒருத்தர் கிட்ட பணம் கடனா வாங்கியிருந்தேன். சொன்ன நேரத்துக்கு  திருப்பிக் கொடுக்க முடியல. ஒரு நாள் அவர் வீட்டுக்கே வந்து சத்தம்போட்டுப் போயிட்டார், ரொம்ப அவமானமா இருந்தது. அப்போதுதான், என் மனைவி கற்பகம்,  'அக்காகிட்ட போய்க் கேட்டுப் பாருங்க'- ன்னு ஞாபகப்படுத்தினாள். நானும் இங்கே வந்து கேட்டேன். அப்போ, நீங்க எங்கேயோ அவசரமா வெளியூருக்குக் கிளம்பிக்கிட்டு இருந்தீங்க. நான் சொன்னதைக்கூட அரைகுறையாதான் கேட்ட மாதிரி பட்டுச்சு...” 

கற்பகம், “ஆமாங்க, இவன் கேட்கிற அந்த அஞ்சு லட்சத்தை நம்ம பீரோவில் இருந்து எடுத்துக் கொடும்மான்னு சொல்லிட்டு, நீங்க போயிட்டீங்க, நானும் கொடுத்துட்டேன்.”

ஸ்ரீதர், “அந்தப் பணம் என் சொந்தக்காரங்க மத்தியிலும், என்கூட தொழில் பண்ற மத்தவங்க மத்தியிலும், என் மானம் பறிபோகாம காப்பாத்துச்சி. அதுக்கப்புறம், இந்தப் பக்கம் வரத் தோதுபடல. 'அக்காவைப் பார்க்கப் போனா பணம் ரெடி பண்ணிட்டுதான் போகணும்'- னு உறுதியா இருந்தேன். இந்த ரெண்டு வருஷத்துல கொஞ்சம் கொஞ்சமா தேத்திக் கொண்டு வந்துட்டேன்..”

அவன் சொல்ல சொல்ல சொக்கலிங்கத்துக்கு மயக்கம் வருவது போல் இருந்தது. அந்தப் பழைய நிகழ்வை ஞாபகப்படுத்திப் பார்க்க முயற்சித்தான்.

“ரொம்ப நன்றி... மாமா, நேரம் கிடைக்கிறப்போ திருச்சிக்கு வாங்க..”- என்று கூறிவிட்டு, கிளம்பிவிட்டான அவன். 

தலையைப் பிடித்தபடி அமர்ந்துவிட்டான், சொக்கலிங்கம். ‘நடந்தது என்ன..? சற்று நிதானமாக யோசிப்போம். ஆக, அன்று எட்டு லட்சத்தை தம்பிக்குக் கொடுப்பதாக கணக்கு எழுதி பீரோவில் வைத்திருந்தேன். இவன் வரவும் அதிலிருந்து, ஐந்து லட்சம் இவனுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. தான் நேரடியாக பங்கு கொள்ளாததாலும்,  அன்று அவசரமாக வெளியூர் சென்று விட்டதாலும், திரும்பி வந்து இதை அந்த புத்தகத்தில் பதிவிட மறந்துவிட்டிருக்கிறேன். தம்பிக்கு அந்த சமயத்தில் மூன்று லட்சம்தான் கொடுத்திருக்கிறேன். அப்படியானால்... தம்பி 28 லட்சம் வாங்கியதாகச் சொன்னானே, எப்படி...? கணக்கு இடிக்கிறதே...’. 

யோசிக்க... யோசிக்க... ஒரு பலமான உண்மை புலப்பட்டது. உடனே, உள்அறைக்குச் சென்று, தன் தம்பி  ராமலிங்கத்தைக் கைபேசியில் அழைத்தான். 

“ஏன்டா பொய் சொன்னே...?” 

“என்னண்ணே புரியலையே...?”
 
“உன் நல்ல மனசுக்கு, அது புரியாதுடா...” 

"கொஞ்சம் தெளிவாச் சொல்லுங்க...”

“அன்னைக்கு, மூணா எட்டான்னு குழப்பம் வந்துச்சு, இல்லையா...?  நீ, 23 - லட்சம் வாங்கிட்டு,  28 - ன்னு ஏன் சொன்னே...?”

“இல்லண்ணே, 28 - தான் வாங்கியிருந்தேன்” 

“இங்க பார், ஏற்கனவே தப்பு பண்ணிட்டேன்னு மனசு என்ன குத்திக்கிட்டு இருக்கு. நீ மேலும் என்னை வேதனைப் படுத்தாத. சொல்லு, உண்மையைச் சொல்லு.”

"ஆமாண்ணே.. அன்னைக்கு சாயந்திரம், நீங்க போன் பண்ணினப்போ உங்க நிலைப்பாட்டில உறுதியா இருந்ததைக் கவனிச்சேன். எங்கயோ தப்பு நடந்திருக்குன்னு புரிஞ்சது. அதுக்காக உங்ககூட சண்டை போட முடியுமா... என்ன.?  ரெண்டுக்கு நாலு முறை நான் எல்லாத்தையும் செக் பண்ணினேன். ரொம்ப உறுதியா 23 - தான்னு தெரிஞ்சது. அடுத்த நாள் நீங்களாவே என்னைக் கூப்பிட்டு, தப்பாச் சொல்லிட்டேன்னு சொல்லுவீங்கன்னு எதிர்பார்த்தேன். ஆனா, உங்க கிட்டருந்து போன் வரல. அப்படீன்னா,  நீங்க சொன்னதுதான் சரின்னு நம்பிக்கிட்டு இருக்கீங்கன்னு புரிஞ்சது. அடுத்த ரெண்டு நாள் எனக்கு ஒண்ணுமே ஒடல. மனசுல என்னென்னமோ பயப்படும்படியான எண்ணங்கள் எல்லாம் வந்து போச்சு. இந்தப் பணப் பிரச்சினையினால, உங்கள இழந்துடுவேனோன்னு பயந்தேன்ணா..”

“………………….”

"அப்புறமா ஒரு முடிவுக்கு வந்தேன். உங்களைக் கூப்பிட்டு, 28 - ன்னு சொன்னேன். சொல்லி முடிச்ச உடனே, உங்க குரல்லயும் ஒரு சாந்தம் வந்ததை கவனிச்சேன். அதனால, நான் எடுத்த முடிவு சரிதான்னு உணர்ந்தேன்.”

சொக்கலிங்கத்தின் கண்களில் நீர் திரண்டு கொண்டிருந்தது. 

"இந்த அஞ்சு லட்சம் என்ன ஒரு பெரிய பணமா...? நீங்க என்னை இதுவரை கவனிச்சதுக்கு, ஐம்பது லட்சம்கூட கொடுக்கலாம். உங்ககிட்ட போன்ல பேசினதுக்கப்புறம் என் மனசு ரொம்ப அமைதி ஆயிடுச்சு..."

“நான்,  அன்னைக்கே அதை மறந்துட்டேன்ணே. இப்போ எப்படி அது வெளிய வந்துச்சு...?”

அவன் பேசிக்கொண்டே போக, தன் கைகுட்டையால் கண்களைத் துடைத்து கொண்டிருந்த சொக்கலிங்கம், தன்னை ஆசுவாசப்படுத்திகொள்ள சற்று நேரம் ஆனது. 

“அண்ணே, லைன்ல இருக்கீங்களா...?” 

“அப்புறம் பேசுறேன்டா..” - என்று கூறி அழைப்பைத் துண்டித்தான். மறுபடியும் வெளியே கிளம்பினான். 

கற்பகம், “எங்கே போறீங்க...?” 

"கோவிலுக்கு..."

'ராமலிங்கம் காலில் போய் விழ முடியாது, இங்கே ராமன் கால்லயாவது விழுந்துட்டு வரேன்.'-  என்று அவன் முனகியது கற்பகத்திற்கு கேட்டிருக்க வாய்ப்பில்லை.

இந்த உன்னத உறவுகள் வாழ்க.. வாழ்கவே...

No comments: